ஜம்மு காஷ்மீரில் அதீத கனமழை - வெள்ளத்தால் நெடுஞ்சாலை முடக்கம்!

ஜம்மு பகுதி முழுவதும் நாளையும் கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.
JammuKashmirLandslide
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி பகுதியில் நள்ளிரவில் பெய்த அதீத கனமழையால் பயங்கர காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 10 வீடுகள் மற்றும் 25 கடைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் உலுக்கிய வெள்ளம்..

இது குறித்து, தாத்ரி வட்டாட்சியர் சதீஷ் ராணா வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி, நள்ளிரவு 12:30 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அதிகாலை 3:00 மணி அளவில் மலையிலிருந்து டன் கணக்கில் அடித்து வரப்பட்ட சேறு, சகதி மற்றும் பாறைகள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்துள்ளன. இதில் குறைந்தது 10 வீடுகள் மற்றும் 25 கடைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி மோசமாகச் சேதமடைந்துள்ளன.

செனாப் நதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்..

வெள்ளத்தின் வேகம் பயங்கரமாக இருந்ததாக அங்கிருந்த சிலர் கூறிவந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேற்றில் தலைகீழாகப் புதைந்துள்ளன.

சில கார்கள் அருகில் உள்ள செனாப் நதிக்குள் நேரடியாக அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களின் துல்லியமான எண்ணிக்கையை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

வழக்கத்தை விட 6 மடங்கு அதிக மழை..

கடந்த 48 மணி நேரத்தில் தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய அண்டை மாவட்டங்களைத் தாக்கும் 3-வது காட்டாற்று வெள்ளம் இது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, தோடா மாவட்டத்தில் வழக்கமான சராசரி தினசரி மழையளவு வெறும் 4.1 மி.மீ ஆகும்.

ஆனால், நேற்று ஒரே நாளில் வழக்கத்தை விட 6 மடங்கு அதிகமாக 26.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், தோடா-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் முடக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

'மேகவெடிப்பு இல்லை' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்..

இது குறித்து தோடா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் லால் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் 'மேகவெடிப்பு' என்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 'இது மேக வெடிப்பு அல்ல, மலைப்பகுதிகளில் திடீரெனப் பெய்யும் அதீத கனமழை.

இதனால் பலவீனமான மலை சரிவுகளில் உள்ள தளர்வான கற்களும் மண்ணும் சரிந்து விழுந்துள்ளன' என விளக்கியுள்ளார். தற்போது பிரேம் நகர் மற்றும் சிராலா பகுதிகளில் உள்ள சாலை இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜூலை 8 வரை நீடிக்கும் ஆபத்து..

இந்தசூழல் நிலவும் நிலையில், ஜம்மு பகுதி முழுவதும் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. அதிகாலை மற்றும் மதிய வேளைகளில் பெய்யும் திடீர் கனமழையால் செனாப் பள்ளத்தாக்கு மற்றும் பிர் பாஞ்சால் மலைத்தொடர்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com