என் மலர்
இந்தியா

இதுதான் விதியா?.. அஜித் பவார் சென்ற விமானத்தை ஓட்ட வேண்டிய விமானி இவரே கிடையாது - ஆனால்!
- அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
- சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாராமதிக்கு அவர் சென்றுகொண்டிருந்த 'லியர் ஜெட் 45' விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதை அருகே விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் அஜித் பவார், அவரின் பாதுகாவலர், விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி மற்றும் துணை பெண் விமானி, பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த விமானி சுமித் கபூரின் மரணம் குறித்த ஒரு சோகமான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில், விபத்துக்குள்ளான அந்த 'லியர் ஜெட் 45' விமானத்தை அன்று கேப்டன் சுமித் கபூர் ஓட்ட வேண்டியதே கிடையாது.
அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியும் அந்த விமானி வராததால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுமித் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து சில நாட்களுக்கு முன்பே இந்தியா திரும்பியிருந்த அவர், நிறுவனத்தின் உத்தரவை ஏற்று அஜித் பவாரை பாராமதிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்.
விபத்து நடந்த இடத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து போயிருந்தன. சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
வானிலை மோசமாக இருந்ததால் விமானியின் கணிப்பு தவறாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், சுமித்தின் நண்பர்கள் அதை மறுக்கின்றனர்.
அவருக்குப் பல ஆயிரம் மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருப்பதால், அவர் தவறு செய்ய வாய்ப்பில்லை என்றும், ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுமித் கபூரின் மகன் மற்றும் மருமகனும் விமானிகளாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






