

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஹதிபாரி போலீசார், நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோத ஐ.பி.எல். சூதாட்ட கும்பலை முறியடித்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றும் பலர் தப்பி சென்றனர்.
இந்த நடவடிக்கையின்போது ரூ. 3,95,590 ரொக்கம், பல கைபேசிகள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பிய குற்றவாளிகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய பல சட்டவிரோத இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுந்தர்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் சட்டவிரோத ஐ.பி.எல். சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், நடப்பு கிரிக்கெட் சீசனில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்ட அமலாக்க முகமைகள் இதுபோன்ற கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில், ஐ.பி.எல். போட்டிகள் மீது ஆன்லைன் பந்தயம் நடத்தி வந்ததாக கூறப்படும் ஒரு கும்பலை இந்தூர் நகர போலீசார் புதன்கிழமை அன்று முறியடித்தனர். இதில், ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் வங்கி அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பாப்ஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறையின்படி, 23 கைபேசிகள், மூன்று மடிக்கணினிகள், ஒரு எல்.ஈ.டி தொலைக்காட்சி மற்றும் ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பந்தயப் பரிவர்த்தனைப் பதிவுகளைக் கொண்ட நான்கு பதிவேடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.