search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டொமினிக் மார்ட்டினிடம் 2-வது நாளாக விசாரணை: வெளிநாட்டு தொடர்பு பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை
    X

    டொமினிக் மார்ட்டினிடம் 2-வது நாளாக விசாரணை: வெளிநாட்டு தொடர்பு பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை

    • டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆயுதப்படை முகாம் அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டு வெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றியும், கொச்சியில் அவர் வசித்துவந்த வீடு, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம், வெடிகுண்டுகள் தயாரிக்க வெடிபொருட்கள் வாங்கிய கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதற்காக எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து டொமினிக் மார்ட்டினை களமச்சேரி ஆயுதப்படை முகாமுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அவரிடம் போலீஸ் அதிகாரி சசிதரன் தலைமையிலான விசாரணை குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அவர்கள் இன்று 2-வது நாளாக டொமினிக் மார்ட்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டொமினிக் மார்ட்டின் தனது முதல் முயற்சியிலேயே குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை நிறைவேற்றி இருப்பதால் அதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே போலீசார் தொடர்ந்து கருதி வருகின்றனர்.

    மேலும் அவர் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், குண்டு வெடிப்பை நிகழ்த்த வெளிநாட்டை சேர்ந்த யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்று போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் காவலிலும் அதுபற்றி அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில், தனது கணவருக்கு ஒரு போன் வந்தபிறகு, அவர் பரபரப்புடன் காணப்பட்டதாக டொமினிக் மார்ட்டினின் மனைவி ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

    அதுபற்றியும் டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வெளிநாட்டை சேர்ந்த யாரிடம் இருந்தாவது அவர் நிதியுதவி பெற்றாரா? குண்டுவெடிப்பை நிகழ்த்துவது எப்படி? என்பதை அறிந்துகொள்ள வேறு வெளிநாடுகளுக்கு எங்கும் சென்றாரா? என்றும் அவரிடம் விசாரித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டபோது அவர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த மேலும் பல தகவல்களை போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அவரிடம் ஆயுதப்படை முகாம் அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கு நாளை அழைத்துச்சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×