‘எவ்வளவு சுகமா இருக்கு...!’- போதை தலைக்கு ஏறியதால் உயர்அழுத்த மின்கம்பி மீது ஏறி படுத்த வாலிபர்

போலீசும், தீயணைப்பு துறையினரும், மின்சார ஊழியர்களும் விரைந்து அவரை மீட்டு கீழே இறக்கினார்கள். அவரை பார்த்ததும் போடி... போ... உனக்கு ஆயுசு கெட்டிடி... என்று திட்டி தீர்த்தபடி சென்றார்கள்.
போதை தலைக்கு ஏறியதால் உயர்அழுத்த மின்கம்பி மீது ஏறி படுத்த வாலிபர்
Published on

போதைக்கு தலைக்கு ஏறினால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இதுதான் குடிகாரர்கள் நிலை. ஆனால் அவர்களை பார்த்து மற்றவர்கள்தான் பரிதாபப்படுவது, கோபப்படுவது, இறக்கப்படுவது என்று எல்லா விதமான உணர்வுகளுக்கும் ஆளாகிறார்கள். இது நம்மூரில் அன்றாடம் நடப்பது தான்.

ஆனால் உத்தரபிரதேசத்தில் குடிகாரர் ஒருவர் செய்த செயல் பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. மகராஜ் கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு தள்ளாடியபடியே நடந்தார். போதை தலைக்கேறிய நிலையில் அந்த வாலிபர் அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் ஏறினார்.

அதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் என்னடா இவன் இப்படி பண்றான்? மேலே 11 கே.வி. உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. அருகில் சென்றாலே கருகிப் போவானேடா... என்றவர்கள் சமயோசிதமாக உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். உடனே மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஆனாலும் எதுவும் தெரியாமலும், புரியாமலும் தட்டுதடுமாறி மின்கம்பத்தின் மேல் ஏறிய அந்த வாலிபர் தண்டவாளம்போல் சென்று கொண்டிருந்த அந்த மின் பாதையில் ஒரு கம்பியில் தலையை வைத்தும் இன்னொரு கம்பியில் கால்களை நீட்டியும் ஹாயாக படுத்துக் கொண்டார்.

ஆகா... என்ன சுகமாக இருக்கிறது என்று நினைத்தார் போலும்... அவ்வப்போது புரண்டு படுத்தபடியும், சில நேரம் கால்களை நீட்டி யோகாசனம் செய்தது போலவும், மேலும் கவிழ்ந்து படுத்து கைகளை ஊன்றி தண்டால் செய்வது போலவும் அவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கை, கால் தவறி கீழே விழுந்தாலும் அவ்வளவுதான். சிதைந்து போவார். அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசும், தீயணைப்பு துறையினரும், மின்சார ஊழியர்களும் விரைந்து அவரை மீட்டு கீழே இறக்கினார்கள். அவரை பார்த்ததும் போடி... போ... உனக்கு ஆயுசு கெட்டிடி... என்று திட்டி தீர்த்தபடி சென்றார்கள். இதற்கிடையில் அவர் மின் கம்பி மீது செய்த சேட்டைகளை செல்போன் சேட்டைக்காரர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கி விட்டார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com