

இந்திய ரெயில்வே துறையில் புதிய புரட்சியாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த அதிநவீன ரயிலை இயக்குவதற்கு ரெயில்வே வாரியம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற உலகளாவிய நாடுகளின் எலைட் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
புகைக்குப் பதிலாக நீராவி..
இந்த ரெயில் வழக்கமான டீசல் என்ஜின்களைப் போல கரும்புகையையோ, நச்சு வாயுக்களையோ வெளியேற்றாது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் இணையும் போது ஏற்படும் வேதியியல் எதிர்வினை மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இந்த ரெயில் இயங்குகிறது.
இதனால் இந்த ரெயிலில் இருந்து புகைக்குப் பதிலாக சுத்தமான நீராவி மட்டுமே உபவிளை பொருளாக வெளியேறும்.
வேகம் மற்றும் வழித்தடம் என்ன?
இந்த பசுமை ரெயில் முதற்கட்டமாக வடமேற்கு ரெயில்வேயின் கீழ் வரும். ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் - சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயங்கும். இதில் மொத்தம் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் சக்திவாய்ந்த 1200 கிலோவாட் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
எரிபொருள் நிலையம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்..
இந்த ரெயிலுக்காக பிரத்யேகமாக ஹைட்ரஜன் வாயுவைச் சேமித்து வைக்கும் மற்றும் நிரப்பும் நிலையம் ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிலையத்திற்கு மத்திய அரசின் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பான PESO அதிகாரப்பூர்வமாக லைசென்ஸ் வழங்கியுள்ளது.
இந்த ரெயிலை முறையாகப் பராமரிப்பதற்காக டெல்லியில் உள்ள சாகுர்பஸ்தி பகுதியில் ஒரு பிரத்யேக மையம் அமைக்கப்பட உள்ளது.
அங்கு வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் நிலையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
2070-க்குள் மாசில்லா இந்தியா!
இந்திய அரசின் ‘தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்த ரெயில் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களின் தேவையை குறைத்து, வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே இந்த ஹைட்ரஜன் ரெயிலின் முக்கிய நோக்கமாகும்.