

மும்பையில் நேற்று Saffronart நிறுவனத்தின் ஏலம் நடைபெற்றது. இதில் ராஜா ரவி வர்மா வரைந்திருந்த 'யசோதா மற்றும் கிருஷ்ணா' புகைப்பட ஓவியம் ரூ.167.2 கோடிக்கு விற்பனையாகி, அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய ஓவியம் என்ற சாதனையை படைத்துள்ளது.
எம்.எப். ஹுசைனின் 'கிராம் யாத்ரா' ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனையானதே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த ஓவியத்தை டெல்லியைச் சேர்ந்த பிரபல கலை சேகரிப்பாளர் கிரண் நாடார் வாங்கினார்.
தொழிலதிபரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனாவாலா இந்த ஓவியத்தை வாங்கினார்.
1980-களில் ரவி வர்மா உச்சத்தில் இருந்தபோது வரைந்த ஓவியம் இது. யசோதா பசுவிடம் பால்கறக்கும்போது, கிருஷ்ணன் அவரது பின் இருந்து பாலை எடுக்க முயற்சிக்கும் காட்சிதான் இந்த ஓவியம்.
இந்திய யதார்த்தவாதக் கலை பாணியில் அமைந்த இந்த ஓவியம், இந்தியக் கலைத்துறையின் "மோனலிசா" என்று கலை விமர்சகர்களால் போற்றப்படுகிறது.
ரவி வர்மாவின் படைப்புகள் "தேசிய பொக்கிஷங்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இவற்றை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த ஓவியங்களை இந்தியாவிற்குள் மட்டுமே விற்கவோ அல்லது மாற்றவோ முடியும்.
ராஜா ரவி வர்மா யார்?
நவீன இந்திய ஓவியக் கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் ராஜா ரவி வர்மா. கேரளாவின் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தியக் கலை வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்.
ஐரோப்பிய ஓவிய நுணுக்கங்களையும் (Realism) யதார்த்தவாதத்தையும் இந்தியத் தொன்மவியல் கதைகளுடன் (ராமாயணம், மகாபாரதம்) இணைத்து ஓவியங்களை வரைந்தவர்.
சாதாரண மக்களும் கலைப்படைப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஓவியங்களை அச்சுப் பிரதிகளாக வெளியிட்டு, அவற்றைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தார்.
இன்று நாம் பார்க்கும் பல இந்து தெய்வங்களின் உருவங்களுக்கு (குறிப்பாக லட்சுமி, சரஸ்வதி) வடிவம் கொடுத்தவர் இவர்தான் என கூறப்படுகிறது.