

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த், ‘ஒரு வழக்கு ஒரு தரவு’ மற்றும் 'Su Sahaya' ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
‘ஒரு வழக்கு ஒரு தரவு’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தரவுகளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள வழக்கு குறித்த தகவல்கள் ஒரே மையப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
இது வழக்குகளை நிர்வகிப்பதையும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும் எளிதாக்கும். இதன் மூலம் நீதிமன்றங்களுக்கு இடையே ஒரு வலுவான டிஜிட்டல் இணைப்பு உருவாகும்.
பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் Su Sahaya சாட் பாட் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய தகவலியல் மையம் மற்றும் உச்ச நீதிமன்றப் பதிவகம் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
உச்ச நீதிமன்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்தச் சாட் பாட் மூலம், பொதுமக்கள் நீதிமன்ற சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம்.
இந்த இரண்டு திட்டங்களும் இந்திய நீதித்துறையின் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும், விரைவானதாகவும் மாற்றும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.