

வட இந்தியாவில் இன்று மதியம் திடீரென வானிலை மாறியது.
தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் பயங்கர மணல் புயல் மற்றும் இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசி ஒட்டுமொத்தப் பகுதிகளையும் உலுக்கியுள்ளது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ‘ரெட் அலர்ட்’ அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ராஜஸ்தானை மூழ்கடித்த மணல் சூறாவளி..
இன்று மதியம் ராஜஸ்தான் மாநிலத்தின் சூரு மாவட்டத்தில் பயங்கர மணல் புயல் தாக்கியது. ஒரு பெரிய சுவர் போல எழுந்த அடர்ந்த தூசிப் படலம் ஒட்டுமொத்த நகரத்தையும் அப்படியே விழுங்கியது போன்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சூரு நகரம் முழுவதும் தூசியால் மூடப்பட்டது.
டெல்லியில் மணிக்கு 92 கி.மீ வேகம் பதிவானது..
ராஜஸ்தானைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதியம் 2:30 மணியளவில் கடுமையான மணல் புயல் வீசியது.
டெல்லியின் பாலம் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 92 கிலோமீட்டர் ஆகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகப் பகலிலேயே இருள் சூழ்ந்தது போன்ற சூழல் ஏற்பட்டது.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை..
மணல் புயலைத் தொடர்ந்து, டெல்லியின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நகரின் பெரும்பாலான இடங்களில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்திலும், சில இடங்களில் 90 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திடீர் மாற்றத்திற்கான காரணம்?
இமயமலைப் பகுதியில் தற்போது நிலவி வரும் 'மேற்கத்திய இடையூறு' காரணமாகவே ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இந்தத் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கம் நாளை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும், அதன் பிறகு மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் கணித்துள்ளனர். டெல்லியில் இன்று காலை முதலே சில பகுதிகளில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.