பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 188 இந்தியர்களை தாயகம் திருப்பி அனுப்பும்படி இந்தியா கோரிக்கை

இரண்டு நாடுகளும் தாங்கள் காவலில் வைத்துள்ள கைதிகள், மீனவர்கள் மற்றும் மீனவர்களின் பட்டியல்களை பறிமாறிக்கொண்டன.
India urges Pakistan to release 188 prisoners
Published on

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தூதரக அணுகல் விதிகளின் கீழ் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு நாடுகளும் தாங்கள் காவலில் வைத்துள்ள கைதிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் பட்டியல்களை பறிமாறிக்கொண்டன.

இதன் அடிப்படையில் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் தூதரக வழிமுறைகள் மூலம், இரண்டு நாடுகளும் தங்கள் நாட்டு காவலில் இருப்பதாக நம்பப்படும் நாட்டு மக்களின் பட்டியல்களை ஒப்படைத்தனர்.

இந்த வழக்கமான ராஜதந்திர பயிற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானிய கைதிகளான 386 பொதுமக்கள் மற்றும் 53 மீனவர்கள் உள்பட 439 நபர்களின் விவரங்களை இந்தியா பகிர்ந்தது.

பாகிஸ்தான் காவலில் இருக்கும் இந்திய கைதிகளான 52 பொதுமக்கள் மற்றும் 198 மீனவர்கள் உட்பட 250 நபர்களின் விவரங்களை பாகிஸ்தான் பகிர்ந்தது.

மேலும் இன்று நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தில், தண்டனை காலத்தை நிறைவு செய்த 188 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்து தாயகம் திருப்பி அனுப்பும் பணிகளை விரைவுபடுத்துமாறு இந்தியா, பாகிஸ்தானை வலியுறுத்தியது.

இதுவரை தூதரக அணுகல் வழங்கப்படாமல் பாகிஸ்தான் காவலில் இருக்கும் 13 இந்திய சிவில் கைதிகளுக்கு, உடனடியாக தூதரக அணுகல் வழங்கவும் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

இந்திய அரசின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, 2014-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் இருந்து 2,661 இந்திய மீனவர்களும் 78 இந்திய குடிமைக் கைதிகளும் தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com