

ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பல நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்தியாவிடம் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்த நிபந்தனையை அமெரிக்கா விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா, ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைத்துக்கொண்டது.
ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு, மத்திய கிழக்கில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. உலகின் பல நாடுகள் கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பால் எரிபொருள் நெருக்கடியில் சிக்கின.
இதை சமாளிக்க, ரஷியாவிடம் எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா தனது தடையை சிறிது காலம் தளர்த்தியது. இதனால் இந்தியா ரஷிய எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது.
அமெரிக்கா அளித்திருந்த காலக்கெடு மே 16 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியா, அமெரிக்க தடையை மீறி ரஷியாவிடம் எண்ணெய் வாங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் முடிவுகள், உள்நாட்டு எரிசக்தித் தேவைகள் மற்றும் நலன்களுக்கு ஏற்பவே இருக்கும். அமெரிக்க தடைகள் உள்ளபோதும் மாஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதி கொள்முதல் இப்போதும் தொடரும்.
எந்த நாட்டிலிருந்து எண்ணெய் வாங்குவது என்பது முற்றிலும் நமது வர்த்தக நலன்களைப் பொறுத்தது.
எனவே, அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நமது எரிசக்தி விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை" என்று விளக்கமளித்தார்.