

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக ஏராளமானோர் உயரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகரான கராகஸ் உட்பட பல பகுதிகள் முற்றிலும் சிதைந்துள்ளன.
இந்த இக்கட்டான பேரிடர் காலத்தில், இந்தியாவின் உன்னதக் கொள்கையின்படி, வெனிசுலாவுக்கு இந்தியா தனது மனிதாபிமான கரங்களை நீட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, 'ஆபரேஷன் அமிஸ்தாத்' என்ற பெயரில் அவசரகால சர்வதேச மீட்புப் பணியை இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
மிக நீண்ட தூர ராணுவப் பயணம்..
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களின் நகர்வின் மூலம், இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C - 17 குளோப்மாஸ்டர் போர் விமானங்கள் டெல்லியிலிருந்து வெனிசுலா நோக்கி விரைந்துள்ளன.
இந்த விமானங்களில் இந்திய ராணுவத்தின் முழுமையான கள மருத்துவமனைப் பிரிவு, 23 டன்னுக்கும் அதிகமான அவசரகால மருந்துகள், அதிநவீன மருத்துவக் கருவிகள் மற்றும் இந்தியாவின் பெருமையான இரண்டு 'பீஷ்மா கியூப்' நடமாடும் மருத்துவமனைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
'பீஷ்மா கியூப்'..
இந்தியாவின் 'ஆரோக்ய மைத்ரி' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப மினியேச்சர் மருத்துவமனைதான் இந்த பீஷ்மா கியூப்.
ஒரு பீஷ்மா கியூப் மூலம் ஒரே நேரத்தில் 300 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியும்.
இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை அரங்கம் , இரத்தப் பரிசோதனை கூடம், எக்ஸ்-ரே கருவிகள் மற்றும் சிறிய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் போன்ற பேரிடர் பகுதிகளில், வெறும் சில நிமிடங்களில் இந்த கியூப்களைப் பிரித்து முழுமையான மருத்துவமனையாக மாற்றிவிட முடியும்.