ஹார்முஸில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்.. ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து ஈரான் தூதர் ஃபத்தாலி ஆலோசனை நடத்தினார்.
ஹார்முஸில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்.. ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
Published on

ஈரானுடன் 2 வார போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தது. இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது.

வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் லெபனான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டதை அடுத்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை போக்குவரத்துக்கு திறந்துவிட்டது.

ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்வதால் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிப்பதாக ஈரான் அறிவித்தது.

இதனிடையே ஈராக்கிலிருந்து 20 லட்சம் பாரல் எண்ணெயுடன் ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த இரு இந்திய சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல்படை துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முகமை உறுதிப்படுத்தியது.

தாக்குதல் எதிரொலியாக அவ்விரு இந்தியக் கப்பல்களும் திருப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கண்டனத்தைப் பதிவு செய்ய வெளியுறவு அமைச்சகம் இந்தியாவில் உள்ள ஈரான் தூதருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது.

இதன்பேரில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து ஈரான் தூதர் ஃபத்தாலி ஆலோசனை நடத்தினார். இதன்போது இந்திய கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு கவலையை வெளிப்படுத்தியதாகவும், கப்பல்களில் செல்லும் வணிகர்கள் மற்றும் மாலுமிகள், பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் பற்றியும் ஈரான் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது என வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கருத்துகளை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துரைக்க ஈரான் தூதரிடம் வலியுறுத்தியதுடன், ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத்தை விரைந்து அனுமதிக்கவும் விக்ரம் மிஸ்ரி ஈரான் தூதரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com