இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 666.93 பில்லியன் டாலராக குறைவு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூன் 26 வார முடிவின்படி அதற்கு முந்தைய வாரத்தை காட்டிலும் 5.65 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
அந்நிய செலாவணி
அந்நிய செலாவணி
Published on

ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச செலாவணி கையிருப்பு 5.654 பில்லியன் டாலர் குறைந்து 666.933 பில்லியன் டாலராக சரிந்ததாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில், இந்த கையிருப்பு 963 மில்லியன் டாலர் அதிகரித்து 672.587 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தது.

மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 728.494 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது.

பின்னர் மோதல் காரணமாக ரூபாய் மதிப்பு அழுத்தத்திற்குள்ளானதாலும், டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டியிருந்ததாலும், பல வாரங்களாக கையிருப்பு சரிவைச் சந்தித்தது.

அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல், எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மே 11 முதல் நாட்டு மக்களுக்குப் பலமுறை பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு 150 மில்லியன் டாலர் குறைந்து 541.067 பில்லியன் டாலராக இருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.

டாலர் மதிப்பில் கணக்கிடப்படும்போது, ​​அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் இந்த அந்நியச் செலாவணி சொத்துகளின் கணக்கீட்டில் அடங்கும்.

தங்கம் கையிருப்பு

இவ்வாரத்தில் தங்கம் கையிருப்பின் மதிப்பு 5.394 பில்லியன் டாலர் குறைந்து 102.536 பில்லியன் டாலராக சரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இந்தியாவின் கையிருப்பு நிலையும் 21 மில்லியன் டாலர் குறைந்து 4.772 பில்லியன் டாலராக இருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com