

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக உள்ளார். கடந்த 2019 இல் முதல் முறையும், 2024 வெற்றிக்குப் பின் அமைந்த அடுத்த அமைச்சரவையிலும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக தொடர்கிறார்.
இந்நிலையில் அவற்றை மாற்றிவிட்டு நிதியமைச்சர் பதவிக்கு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதற்கான அறிவிப்பு நாளை (ஜூன் 29) வெளியாகலாம் என கூறப்படுகிறது. அவருடன் மற்ற அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
69 வயதான சக்திகாந்த தாஸ் தற்போது பிரதமர் மோடியின் தலைமைச் செயலராக உள்ளார்.
அவர் ஒருவேளை நிதியமைச்சராக பதவி ஏற்றால், மன்மோகன் சிங்கிற்கும், சிடி தேஷ்முக்கிற்கும் பிறகு நிதிதுறை பின்னணியில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சராக அவர் இருப்பார்.
சிடி தேஷ்முக் 1943 முதல் 1949 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராக இருந்தார். பின் 1950 முதல் 1956 வரை மத்திய நிதியமைச்சராக செயல்பட்டார்.
மன்மோகன் சிங் 1982 முதல் 1985 வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக செயல்பட்டார். பின் 1991 முதல் 96 வரை நிதியமைச்சராகவும் பின்னர் 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.
இவர்களின் அடிச்சுவட்டில் 2018 முதல் 2024. ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக செயல்பட்ட சக்திகாந்த தாஸ், அந்த பதவியில் இருந்துவிட்டு நிதியமைச்சர் பதவிக்கு வரும் மூன்றாவது நபர் என்ற பெருமையை பெறுவார்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 1957 இல் பிறந்த சக்திகாந்த தாஸ், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்று பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். பின் பிரிட்டனின் பிரிமிங்காம் பல்கலையில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
1980 இல் தமிழ்நாடு பேட்ச் ஐஏஎஸ் ஆக பயிற்சி பெற்று கடந்த 37 ஆண்டுகளாக நிதி மற்றும் பொருளாதர துறைகளில் பங்காற்றி வந்துள்ளார்.
இருப்பினும் பாஜக கட்சியில் இல்லாத ஒருவரை நிதியமைச்சராக்க கட்சியில் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.