

பெங்களூரு :
போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்ட பின்னர் கர்நாடகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தினமும் தலைநகர் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையாளர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் போதைப்பொருட்கள் வழக்கு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் 1,235 போதைப்பொருட்கள் வழக்கு பதிவாகி இருந்தது. 2020-ம் ஆண்டு 2,844 வழக்குகளும், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,575 வழக்குகளும் பதிவாகி உள்ளது. போதைப்பொருட்கள் விற்றதாக கடந்த 2019-ம் ஆண்டு 1,658 பேர் மீதும், 2020-ம் ஆண்டு 4,052 பேர் மீதும், 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 4,656 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் 2019-ம் ஆண்டில் 378 பேருக்கும், 2020-ம் ஆண்டு 871 பேருக்கும், 2021-ம் ஆண்டு அக்டோபர் வரை 471 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு தண்டனை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு கோர்ட்டுகளின் எண்ணிக்கை, தடய அறிவியல் மையத்தின் எண்ணிக்கை குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டு சிவில் வழக்குகளையும் விசாரித்து வருகிறது.
இதனால் போதைப்பொருள் வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுகள் குறைவாக உள்ளது. இதுபோல மாநிலத்தில் மைசூரு, மங்களூரு, தாவணகெரே, பெலகாவி, கலபுரகி, பெங்களூரு ஆகிய 6 இடங்களில் தடய அறிவியல் மையம் உள்ளது.
இந்த 6 மையங்களிலும் மொத்தம் 220 ஊழியர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். அதிலும் பெங்களூருவில் மட்டும் 120 பேர் பணியாற்றுகிறார்கள்.
இந்த 6 மையங்களுக்கும் ஒரு மாதத்திற்கு 100 முதல் 120 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆட்கள் குறைவால் அந்த மையங்களில் பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், முடிவுகள் வெளியாவதிலும் தாமதம் ஆவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே தடய அறிவியல் மையங்களில் நிலவும் ஆள்பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.