

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிப் பகுதியில் லேசான மழை பெய்தது.
முன்னதாக ஸ்ரீநகரில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடமேற்கு இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பரவலான மழையும் ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் எனவும் IMD கணித்துள்ளது.
நாளை முதல் 18-ம் தேதி வரை இப்பகுதி முழுவதும் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்.
அதேபோல் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா முழுவதும் ஆங்காங்கே பரவலான மழை பெய்யும் எனவும் கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பம் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் பெய்த சாரல் மழையை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.