ஐதராபாத்தின் வட்டாட்சியர் வீட்டில் கணக்கில் வராத ரூ. 5.05 கோடி பறிமுதல்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு.
INCOME TAX RAID
Published on

ஐதராபாத்தின் ஷமிர்பேட்டையினை சேர்ந்த வட்டாட்சியர் மற்றும் இணை துணைப் பதிவாளர் தும்மகொம்ம சுசரிதா. இவர் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரது இல்லத்திலும், அவரது உறவினர்கள், பினாமிகள் மற்றும் கூட்டாளிகளுடன் தொடர்புடைய பிற இடங்களிலும் சோதனைகளை நடத்தினர். இந்த சோதனையின் போது  ​​ரூ. 5.05 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சித்திப்பேட்டையில் 2.17 ஏக்கர் விவசாய நிலம், ஹைதராபாத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 மனைகள், ஒரு போக்ஸ்வேகன் கார், ஒரு ஹூண்டாய் கிரெட்டா, ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 12 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி வைப்புத்தொகையில் ரூ. 38 லட்சம் ஆகியவை சோதனைகளில் கண்டெடுக்கப்பட்டன. 

இவருக்கு தொடர்புடைய, மற்றவர்களின் பெயர்களில் மேலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய, மேலதிக சரிபார்ப்பு நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட வருவாய் அதிகாரி மீதான சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துப் பரிமாற்றம் மற்றும் முந்தைய இலஞ்ச வழக்கு ஆகிய இரண்டையும் ஊழல் தடுப்புப் பிரிவு தற்போது விசாரித்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com