

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் பயிலும் மாணவர்கள், இனி தங்களது வளாக வேலைவாய்ப்புக்கான சுயவிவரக் குறிப்பில் தங்களின் JEE ரேங்க் மற்றும் GATE மதிப்பெண்களைக் குறிப்பிடக் கூடாது என அனைத்து ஐஐடி வேலைவாயப்புக் குழு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து 23 ஐஐடி-களின் வேலைவாய்ப்பு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான AIPC கூட்டத்தில், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்களை மறைக்க உத்தரவிட்டது ஏன்?
இதுகுறித்து AIPC அமைப்பாளர் மற்றும் ஐஐடி குவஹாத்தியின் கணினி அறிவியல் பேராசிரியருமான ஜான் ஜோஸ் கூறுகையில், "நுழைவுத் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மட்டுமே.
ஆனால், ஐஐடி-யில் அவர்கள் படிக்கும் பட்டம் என்பது பல வருட உழைப்பைக் குறிப்பது. நிறுவனங்கள் மாணவர்களின் தற்போதைய திறமை, செயல்முறை திட்டங்கள் மற்றும் சாதனைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
ஐஐடி-க்குள் நுழைவதற்குக் காரணமான மதிப்பெண்களை இனி வேலைவாய்ப்பில் பார்க்க வேண்டியதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட ஐஐடி பாடப்பிரிவின் தொடக்க மற்றும் இறுதி ரேங்க்குகளை ஒப்பிட்டுப் பார்த்து, சம்பந்தப்பட்ட மாணவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவரா அல்லது இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவரா என்பதை நிறுவனங்கள் எளிதாகக் கண்டறிந்துவிடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த மறைமுக பாகுபாட்டைத் தடுக்கவே ரேங்க் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள் என்னென்ன?
மாணவர்கள் தங்களின் ரெஸ்யூம்களில் தற்போதைய சிபிஐ மதிப்பெண், ப்ராஜெக்ட்டுகள், இன்டென்ஷிப் விவரங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு வேலை தருவதாக உறுதியளித்துவிட்டு பின்னர் அதை ரத்து செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிறுவங்களின் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
IIT-க்கள் தங்களின் வேலைவாய்ப்புப் பதிவுகளில், ஒரு சில மாணவர்களுக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த சம்பள பேக்கேஜ்களை விளம்பரப்படுத்துகின்றன.
அதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாணவர்களுக்கான சராசரி சம்பள விவரங்களை மட்டுமே வெளியிடும்.
இந்த அதிரடி மாற்றங்கள், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பொறியியல் நிறுவனங்களின் வளாக வேலைவாய்ப்பு நடைமுறையையே மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.