

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரிகுடா அடுத்த சிவன்னகுடாவை சேர்ந்தவர் நரசிம்மா (வயது 60). இவரது மனைவி வசந்தா( 56). இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி ஐதராபாத் வந்தனர்.
இவர்கள் மீர் பேட்டையில் உள்ள பி.என்.ரெட்டி நகர், டீச்சர்ஸ் காலனியில் வாடகை வீட்டில் தங்கினர். நரசிம்மா தினக்கூலி வேலையும், அவரது மனைவி வீட்டு வேலையும் செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக நரசிம்மாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் தகராறு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டு வேலைக்கு கிளம்பிய போது நரசிம்மா மீண்டும் தகராறு செய்தார்.
சண்டைக்குப் பிறகு வசந்தா வீட்டு வேலைக்கு சென்றார். ஒரு வீட்டில் வேலை முடித்துவிட்டு மற்றொரு வீட்டிற்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மனைவியை நடு ரோட்டில் வழி மறித்த நரசிம்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நரசிம்மா தன்னிடம் வைத்திருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வசந்தா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மீர் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வசந்தாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நரசிம்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மனைவியை நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.