

காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வரும் இமாச்சலபிரதேசத்தில் மாநில அரசின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம், பழைய கடன்களுக்கான வட்டி ஆகியவற்றுக்கே செலுத்தப்படுகிறது.
இது தவிர இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் எதிர்பாராத செலவுகள், வருவாய் ஆதாரம் குறைவது பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியதால் ஏற்படும் சுமை ஆகியவை மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளி விட்டது.
கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங்குக்கு முதல்-மந்திரி ஊதியத்தில் 50 சதவீதம், அமைச்சர்கள் ஊதியத்தில் 30 சதவீதம், எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தில் 20 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் பிரச்சனை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநில நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், “தலைமைச் செயலாளர், கூடுதல் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், காவல்துறை டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி. வனத்துறை தலைமை அதிகாரி, இணைய அதிகாரிகள் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 30 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்கு பின் வழங்கப்படும்.
இதேபோல அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், காவல் துறை ஐ.ஜி., எஸ்.பி., வனத்துறையில் 2-ம் நிலை அதிகாரிகள் ஆகியோருக்கு 20 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்கள் கழித்து வழங்கப்படும். இது தற்காலிக நட வடிக்கைதான். மாநிலத்தின் நிதிநிலையை சீராக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிலை சீரடைந்ததும் நிலுவை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.