மீட்கச் சென்றவர்களுக்கே ஆபத்து: அருணாச்சல பிரதேசத்தில் தொடரும் மழையின் கோரத்தாண்டவம்!

தற்போது அஞ்சாவ் மற்றும் கெயி பான்யோர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
 Heavy rain in Arunachal Pradesh
Published on

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளன. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தின் உள்கட்டமைப்புகள், முக்கியமாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்த மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு இடையே, லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள தம்புக் பகுதியில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சீறி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக நான்கு மீனவர்கள் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்டனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த ஏழு உள்ளூர் இளைஞர்கள் ரப்பர் படகு ஒன்றின் மூலம் ஆற்றில் இறங்கினர்.

ஆனால், ஆற்றின் நீர்வரத்து மற்றும் நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், எதிர்பாராதவிதமாக அவர்களது படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இதனால் மீனவர்களை மீட்கச் சென்ற ஏழு இளைஞர்களும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மரங்கள் மற்றும் மணல் திட்டுகளில் சிக்கித் தவித்தனர். மீட்கச் சென்றவர்களே மீட்பு தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து ஒரு கூட்டு மீட்புப் பணியைத் தொடங்கின. வெள்ளத்தின் சீற்றம் மிகக் கொடூரமாக இருந்ததால், உள்ளூர் மக்கள் தங்களது சொந்த வளர்ப்பு யானைகளைப் பயன்படுத்தி ஆற்றில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

இருப்பினும், மார்பளவு பாய்ந்து வந்த வெள்ளத்தில் யானைகளாலும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இறுதியாக, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. திறம்பட செயல்பட்ட விமானப்படை வீரர்கள் ஆற்றுத் திட்டில் தவித்துக் கொண்டிருந்தவர்களை பத்திரமாக ஏர்லிப்ட் செய்து மீட்டனர். மற்றவர்கள் என்.டி.ஆர்.எஃப் படகுகள் மூலம் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்டனர்.

மற்றொருபுறம், லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள சிஜி ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக, ஆற்றின் குறுக்கே மண் மற்றும் பாறைகள் குவிந்து ஒரு தற்காலிக செயற்கை ஏரி உருவானது. இது உடைந்தால் கீழ்மட்டப் பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படும் என்ற பீதி நிலவியது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக நீர் மெதுவாக வெளியேறியதால் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது அஞ்சாவ் மற்றும் கெயி பான்யோர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் பல நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளுக்கு அருகிலோ அல்லது மலைப்பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என மாநில அரசு அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com