அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: திடீர் வெள்ளம், நிலச்சரிவால் 3 பேர் மாயம்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கநதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
heavy rain in Arunachal Pradesh
Published on

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள கேயி பன்யோர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யாசாலி பகுதியில் உள்ள நீப்கோ நீர்மின் திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே, கட்டுமானத்தில் இருந்த தடுப்புச்சுவர் ஒன்று வெள்ளத்தின் அழுத்தத்தால் இடிந்து விழுந்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 18 வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறைத் செயலாளர் தனி சூலு தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்குத் கூடுதல் துணை ஆணையர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஏற்கனவே களத்தில் இறங்கிப் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் அவசர உதவிக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மீட்புப் பணிகளுக்கு உதவ முன்னாள் ராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கநதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள நீர்மின் திட்டத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொடின் மற்றும் ஹோஜ் ஆகிய பகுதிகளுக்கு இடையே சாலைகளில் டன் கணக்கில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், நூற்றுக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.

சாலையைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், ஆற்றுப் படுகைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com