HDFC வங்கியின் புதிய தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமனம்!

ராஜீவ் குமாருக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் பணிபுரியும் நபர்களுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Former CEC & ex-finance secretary Rajiv Kumar appointed part-time chairman
Published on

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் புதிய பகுதிநேரத் தலைவராக நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், முன்னாள் நிதித்துறைச் செயலாளருமான ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நெறிமுறை சார்ந்த காரணங்களைக் குறிப்பிட்டு வங்கியின் தலைவர் பதவியிலிருந்து அதனு சக்ரவர்த்தி தீடீரென விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இவர் வங்கியின் சுயாதீன இயக்குநகராக செயல்படுவார்.

மேலும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு வங்கியின் பகுதிநேரத் தலைவராக இவர் பொறுப்பு வகிப்பார் என வங்கி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

வங்கியியல் துறையில் கொண்டுவந்த அதிரடி மாற்றங்கள்..

நிதித்துறைச் செயலாளராக (2017 - 2020) ராஜீவ் குமார் பொறுப்பேற்றபோது, பொதுத்துறை வங்கிகள் பெரும் வாராக்கடன் சுமையிலும், மூலதனப் பற்றாக்குறையிலும் தவித்து வந்தன.

கருப்புப் பணத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், இவர் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே சுமார் 3.38 லட்சம் போலி நிறுவனங்களின் வங்கிப் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஏழை மக்களின் பணத்தைச் சூறையாடும் போலி நிதி நிறுவனங்களைத் தடுக்க, 2019 இல் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இன்சால்வென்சி மற்றும் பேங்க்ரப்சி கோட் சட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களைப் பொறுப்பேற்கச் செய்ததோடு, ரூ.50 கோடிக்கும் மேல் கடன் வாங்குபவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடாமல் இருக்க பாஸ்போர்ட் விவரங்களைக் கட்டாயமாக்கினார்.

ரூ.250 கோடிக்கும் அதிகமான கடன்களைக் கண்காணிக்க 34-க்கும் மேற்பட்ட காரணிகளை உள்ளடக்கிய ஐடி அடிப்படையிலான ரிஸ்க் ஸ்கோரிங் முறையை அறிமுகப்படுத்தினார்.

வங்கிகளின் பலத்தை அதிகரிக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக மூலதனம் வழங்கியதோடு, 27 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து 12 வலுவான வங்கிகளாக மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தேர்தல் ஆணையத்தில் செய்த சீர்திருத்தங்கள்..

2020-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக இணைந்து, பின்னர் இந்தியாவின் 25 வது தலைமைத் தேர்தல் ஆணையராக உயர்ந்தார்.

இவரது பதவிக் காலத்தில், 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கும் வசதி உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

உலகிலேயே அதிக வாக்காளர்கள் பங்கேற்ற வரலாற்று சிறப்புமிக்க 2024 பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை இவருக்கு உண்டு.

இருப்பினும் இவரது பதவிக் காலத்தில் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன.

இதனிடையே வங்கியின் மற்ற இயக்குநர்களுடனோ அல்லது முக்கிய அதிகாரிகளுடனோ ராஜீவ் குமாருக்கு எவ்வித குடும்ப உறவும் இல்லை என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com