மாற்றுத்திறனாளி வீரரை சுட்டுக்கொன்றது ஏன்?: சக வீரர் பகீர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிராக் தியாகி ஜப்பானில் நடைபெற இருந்த ஆசிய பாரா தடகள விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
Para athlete chirag tiyagi shot dead
Published on

பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற 8வது இந்திய திறந்தநிலை பாரா தடகள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் சுற்றில் கலந்துகொண்ட சிராக் தியாகி தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த 25 வயதான தியாகி, ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய பாரா தடகள விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார்.

புதன்கிழமை காலை தியாகி தனது விடுதிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாயமான தியாகியை போலீசார் தேடி வந்தனர்.

சனிக்கிழமை மதியம் காசியாபாத்தின் சாய் குஞ்ச் பகுதியில் தியாகியின் உடலைக் கண்டெடுத்த போலீசார், முதற்கட்ட ஆய்வில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாற்றுத்திறனாளி தடகள வீரரான யஷ் கத்திக் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஆவணங்கள் சரிபார்ப்பின்போது எனக்கு எதிராக தியாகி புகார் அளித்ததால் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அவரை தனியாக கூட்டிச் சென்று முதுகில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com