அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணம். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண மத்திய அரசு தவறியதால் தான் இந்த பொருளாதார நெருக்கடி உயர்ந்துள்ளது' என்று சாடினார்.
அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அரசு பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்தால் தான் மக்களின் சிரமங்கள் குறையும், "பொதுமக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்ற பிரதமரின் அறிவுரை நடைமுறைக்குச் சாத்தியமற்றது என டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
சமையல் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் பெருமளவில் பதித்துள்ளார்கள். தமிழகத்தில் 'தாலிக்கு தங்கம்' போன்ற திட்டங்கள் இருக்கும் சூழலில், சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது 'எட்டாக்கனியாக மாறிவிட்டது' என்று தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் மக்களை "விளக்கேற்றச் சொன்னது" போன்ற தேவையற்ற அறிவிப்புகளை தவிர்த்து, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களின் பணத்தை சேமித்து முறையான தேசியக் கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்த கேள்விக்கு, அது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு, 'எங்களின் நோக்கம் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதுதான்' என்று கூறி பெட்டியை நிறைவு செய்தார் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்.