

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள உல்லாஸ்நகரில் விஞ்ஞானியான தந்தைக்கும், பள்ளி ஆசிரியையான தாய்க்கும் 2002 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிறந்தவர் காஷிஷ் மெத்வானி.
சிறுவயதிலிருந்தே, 'மிஸ் இந்தியா' ஆவது மற்றும் தேச சேவை என அவருக்கு இரண்டு பெரிய கனவுகள் இருந்தன.
படிப்பு
படிப்பில் சிறந்து விளங்கிய அவர், சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் உயிரித்தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேலும், பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc), நரம்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்த அவருக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நிராகரித்த அவர் தனது கனவுகளை நோக்கி பயணிக்க தொடங்கினார்.
படிப்பு தவிர்த்து, பரதநாட்டியம், தபலா, துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் சிறந்து விளங்கும் காஷிஷ் மெத்வானி கொரோனா ஊரடங்கின் போது இரத்தம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு தன்னார்வ நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.
கனவு
2023ல் 'மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா' பட்டத்தை வென்று கஷிஷ் மாடலிங் உலகில் முத்திரை பதித்தார்.
தேச சேவை என்ற அவரின் அடுத்த கனவுக்காக உழைத்த அவர் 2024 CDS தேர்வில், அகில இந்திய அளவில் 2 வது இடத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பின்னர், சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் 11 மாதக் பயிற்சியை நிறைவு செய்தார்.
தேச சேவை
பயிற்சியை நிறைவுசெய்த பிறகு, கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பு விழாவைத் தொடர்ந்து காஷிஷ் மெத்வானி இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
வான் பாதுகாப்புப் படைப்பிரிவில் அவர் பணியாற்றி வருகிறார்.
மாடலிங் தனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்தாலும், ராணுவ சீருடைதான் தனது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.