மங்களூரு அருகே சாமி ஊர்வலத்தின்போது நடைபாலம் இடிந்து விபத்து- 8 பேர் படுகாயம்

சாமி பல்லக்குடன் அதனை சுமந்து வந்த 8 பேரும் கால்வாய்க்குள் விழுந்தனர்.
மங்களூரு அருகே சாமி ஊர்வலத்தின்போது நடைபாலம் இடிந்து விபத்து- 8 பேர் படுகாயம்
Published on

மங்களூரு அருகே சாமி சிலை ஊர்வலத்தின்போது நடைபாலம் இடிந்து விழுந்தது. இதில் சாமி சிலை சேதம் அடைந்ததுடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் புச்செமொகரு பவடபைலு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவையொட்டி தெய்வ பண்டார ஊர்வலம் நடந்தது. அதாவது, புச்செமொகரு பவடபைலு பகுதியில் இருந்து சாமி சிலையை பல்லக்கில் வைத்து தகோடு பர்கே பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

சாமி சிலையை பல்லக்கில் வைத்து சாமியார்கள் ஊர்வலமாக தகோடு பர்கே நோக்கி சென்றனர். இந்த பல்லக்கிற்கு முன்னதாக மேளதாளங்கள் சென்றன. இந்த நிலையில் அங்குள்ள குறுகிய நடைபாலத்தை கடந்து ஊர்வலம் சென்றது. அப்போது மேளதாளங்கள், இசைக்குழு வாத்தியங்கள் முன்னால் சென்றுவிட்டன.

பின்னால் சாமி பல்லக்கு வந்தபோது, திடீரென அந்த நடைபாலம் இடிந்து விழுந்தது. இதனால் சாமி பல்லக்குடன் அதனை சுமந்து வந்த 8 பேரும் கால்வாய்க்குள் விழுந்தனர். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் விரைந்து வந்து கால்வாயில் விழுந்து கிடந்தவர்களை மீட்டனர். மேலும் சாமி சிலையையும் மீட்டனர். இதில் சாமி சிலை சேதம் அடைந்திருந்தது.

அத்துடன் பல்லக்கு சுமந்து வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒருவரின் காலில் கல் தூண் விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கால்வாயின் குறுக்கே இருந்த நடைபாலம் மிகவும் பழமையானது என்பதால், அது சேதம் அடைந்திருந்தது. மொத்தமாக அதனை கடந்து செல்ல முயன்றபோது, இடிந்து விழுந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com