search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தீவிபத்து
    X

    3 பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தீவிபத்து

    • கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர்.
    • டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்கியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் கண்ணூர் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு அருகே உள்ள 8-வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள், அந்த பெட்டிக்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் அந்த பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி கண்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 3 வாகனங்கள் ரெயில் பெட்டியில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. என்றாலும் ரெயில் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என தெரிகிறது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ரெயில்வே உயர் அதிகாரிகளும், கண்ணூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயில் எரிந்து நாசமான ரெயில்பெட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர். டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    இதில் 3 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 9 பேர் தீக்காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். மத்திய உளவு துறையும் இதுகுறித்து ரகசிய விசாரணையில் இறங்கியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தான், பயணிகள் எரித்து கொல்லப்பட்ட அதே ரெயிலின் பெட்டி இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது, ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையைும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்பின்பே ரெயில் பெட்டி எப்படி தீப்பிடித்து எரிந்தது, இதன் பின்னணியில் சதி வேலை உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.

    Next Story
    ×