

இந்தியாவில், திருமணங்கள் என்றாலே உறவினர்களால் நிரம்பி வழியும் வீடுகள், சடங்குகள், முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து போடும் பயணத் திட்டங்கள், பல்வேறு வகையான உணவுகள், ஆடல், பாடல் என பெரும்பாலும் சாதாரணத் தருணங்களை மறக்க முடியாத நிகழ்வுகளாக மாற்றிவிடும். பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பாரம்பரியம், சமூகப் பிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமான கொண்டாட்டங்களுடனேயே திருமணங்களை நடத்த விரும்புகின்றன.
அந்த வகையில் ஒரு இந்தியக் குடும்பம் திருமணப் பயணத்திற்காக ஒரு முழு ரெயில் பெட்டியையும் முன்பதிவு செய்து பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில் பெட்டி வெளியே மாலையால் அலங்காரம் செய்து விருந்தினர்களை வரவேற்கிறார். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரும், உற்சாகமான இசைக்கு நடனமாடுகின்றனர்.
மணப்பெண் கேக் வெட்டும்போது, அவரைச் சுற்றி முழு குடும்பமும் ஆரவாரம் செய்தது. மணப்பெண்ணின் உறவினர்கள் மணமகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். இதற்கு மத்தியில், ஒரு ரெயில் டிக்கெட் பரிசோதகர், ஆரவாரமான கூட்டத்திற்கு நடுவே தனது வேலையைச் செய்தார். பின்னர் அவரும் அந்த குடும்பத்தோடு புன்னகையுடன் கொண்டாட்டங்களில் இணைந்தார்.
இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பலர் இந்த கொண்டாட்டத்தின் தனித்துவமான முறையையும் ஒற்றுமை உணர்வையும் பாராட்டி உள்ளனர். திருமணத்திற்காகப் பெரிய குடும்பத்தினர் அனைவரும் ரெயிலில் ஒன்றாகப் பயணம் செய்வது நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ரெயில் பெட்டிகளை முழுமையாக முன்பதிவு செய்வது ரெயில்வேயால் வழங்கப்படும் ஒரு முறையான சேவையாகும். இந்தியாவில் ஒரு முழு ரெயிலையோ அல்லது குறிப்பிட்ட பெட்டிகளையோ ஐ.ஆர்.சி.டி.சி. முழு கட்டண விகித அமைப்பு மூலம் முன்பதிவு செய்யலாம். ஆன்லைனிலோ அல்லது முக்கிய ரெயில் நிலையங்களிலோ இதுபோன்று முன்பதிவு செய்யலாம். இதற்கு, 6 மாதங்களுக்கு முன்பே பயணத் திட்டங்களைச் சமர்ப்பித்து ஒரு பெட்டிக்கு சுமார் ரூ.50 ஆயிரம் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.