

ரஷியாவை சேர்ந்த ருஸ்தம் நபியேவ் என்ற நபர் விபத்தில் கால்களை இழந்த நிலையில் இரு கைகளைக் கொண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
விபத்து
ருஸ்தம் நபியேவ் முன்னாள் ரஷிய ராணுவ வீரர் ஆவார். 2015-ல் அவர் உறங்கிக்கொண்டிருந்த ராணுவ முகாம் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ருஸ்தம் தனது இரண்டு கால்களையும் இழந்தார்.
இருந்தும் மனம் தளராமல் அதிலிருந்து மீண்டு வந்த ருஸ்தம் தனது கைகளை கொண்டே எவரெஸ்ட் மலையில் ஏறி வரலாறு படைத்துள்ளார். தற்போது அவருக்கு வயது 34.
சாதனை
உலகில் முதன்முறையாக இரண்டு கால்கள் இல்லாத ஒருவர், எந்தவொரு செயற்கைக் கால்களையும் பயன்படுத்தாமல், தனது கைகளை கொண்டே எவரெஸ்ட் மலையில் ஏறியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
நேபாள நேரப்படி நேற்று (புதன்கிழமை) காலை 8.15க்கு ருஸ்தம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
பதிவு
எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய பிறகு, ருஸ்தம் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், "வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்காக.. ருஸ்தம் நபியேவ், எவரெஸ்ட் 2026" என்று குறிப்பிட்டுள்ளார்.