

திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரிலோவாவை சேர்ந்தவர் அப்பயம்மா (வயது 72). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
4 மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு வருகிறார். முதுகு வில்லு போல் வளைந்து இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் அவரது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தம் தாராவிற்கு நடந்தே சென்று 2 கடையில் வேலை செய்து வருகிறார்.
வேலை செய்யும் கடைகளில் கிடைக்கும் அட்டைப் பெட்டிகள் மற்றும் இரும்பு கழிவு பொருட்களை சேகரித்து பழைய பொருட்கள் வாங்கும் கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார். இவருக்கு வரும் முதியோர் உதவித்தொகையை அவரது மகன்களே வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும் மூதாட்டி அவர்களிடம் பணத்தை கேட்பது இல்லை.
தள்ளாத வயதிலும் தளராது வேலை செய்து வரும் மூதாட்டியை கண்டு அப்பகுதி மக்கள் வியந்து வருகின்றனர்.