மேங்கு வங்கத்தில் மதிய உணவு திட்டத்தில் இருந்து நீக்கப்படும் முட்டை: திரிணாமுல் காங்கிரசின் ரியாக்ஷன்..!

பள்ளிகளில் மதிய உணவில் இனிமேல் முட்டை வழங்கடாது என செய்திகள் உலா வருவதால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மதிய உணவு திட்டம்
மதிய உணவு திட்டம்
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது, பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பாஜக அங்கு ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் ISKCON மதிய உணவு திட்டத்தை ஏற்று நடத்தும் எனத் தெரிகிறது. ISKCON முழுமையான சைவ உணவை வற்புறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முட்டை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். இந்த நிலையில் பாஜக-வின் இந்த முடிவு மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்று சொன்னோமே என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறியதாவது:-

வங்காளத்தில் உள்ள புதிய பாஜக அரசு, எதிர்ப்பாளர்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல்களை அரங்கேற்றுகிறது. ஆனாலும், மதிய உணவிலிருந்து முட்டைகளை நீக்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மறுக்கிறது. திணிக்கப்பட்ட இந்த சைவ உணவு முறையை வங்காளம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குமால் கோஷ் கூறியதாவது:-

நாங்கள் இந்த மத அமைப்பை (ISKCON) மதிக்கிறோம். ஆனால், ஊட்டச்சத்துக்கு முட்டைகள் முக்கியமானவை என்பதால், இது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சரை வலியுறுத்துவோம். மாணவர்கள் ஏன் சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும்? குழந்தைகளுக்கு முட்டைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

திரிணாமுல் கட்சியின் அதிருப்தி பிரிவின் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி கூறியதாவது:-

முட்டை புரதச்சத்தின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், உணவில் இருந்து அதை நீக்குவது சரியல்ல. வங்காளத்தில் மக்கள் பாரம்பரியமாக அசைவ உணவை உட்கொள்கின்றனர். முட்டை போன்றவை நீக்கப்பட்டு வெறும் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டால், அது வங்காளத்தின் உணவு பழக்க வழக்கங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறியதாவது:-

ISKCON நன்றாகச் சமைக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், நீங்கள் 'ஹரே கிருஷ்ணா' என்று சொல்ல வேண்டியதில்லை. யாரும் உங்களை அதற்காக வற்புறுத்தமாட்டார்கள். ஆனால், உங்களுக்கு மிகச்சிறந்த உணவு கிடைக்கும். தூய்மையான உணவு கிடைக்கும், எனவே கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் எதை உறுதியளிக்கிறோமோ, அதை நன்கு யோசித்த பிறகே உறுதியளிக்கிறோம். மேலும் அந்த வாக்குறுதியைச் சிறப்பாக நிறைவேற்றுகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com