Assam Poll: ஏப்ரல் 9 முதல் 29 வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை

அசாமில் அடுத்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
Assam Poll: ஏப்ரல் 9 முதல் 29 வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை
Published on

அசாம் மாநிலத்தில் முதல் மந்திரி ஹிமந்த் பிஸ்வா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மே 20-ம் தேதி அசாம் அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்பட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவோ, பிரசுரிக்கவோ அல்லது அச்சு அல்லது மின்னணு ஊடகம் வழியே தகவல்களை வெளியிடவோ அல்லது வேறு எந்த வடிவிலோ அவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com