

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில், உள்ளூர் குழுக்களுக்கு டிரோன் போர் முறை குறித்து சட்டவிரோதமாகப் பயிற்சி அளித்ததாக அமெரிக்க நாட்டவர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான மேத்யூ வான்டைக் அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது.
அவர் 2011இல் நடந்த லிபிய உள்நாட்டுப் போரில் பங்கேற்று, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். அதன்பிறகு, சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக அறியப்படுகிறது.
இத்தகைய நபர் இந்திய எல்லையில் பிடிபட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
உளவுத்துறை வட்டாரங்களின்படி, மேத்யூ சில காலமாக மணிப்பூர் மற்றும் மியான்மர் எல்லைகளில் சுற்றித் திரிந்து வருகிறார்.
அங்குள்ள சில குழுக்களுக்கு, டிரோன்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது மற்றும் அவற்றைக் கொண்டு தாக்குதல்களை நடத்துவது எப்படி என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படுவதைப் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன.
மேத்யூ இவற்றை தனிப்பட்ட முறையில் செய்கிறாரா? அல்லது இதற்குப் பின்னால் வெளிநாட்டு தலையீடு உள்ளதா? என்று புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.