

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் (ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர) அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கோயிலுக்கு வந்த நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்த ராஜினாமாவை அளித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையில் ரூ.7 கோடிக்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோயிலில் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாநில அரசு 3 பேர்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதற்கிடையே வெறும் ராஜினாமாக்கள் மட்டும் போதாது, பதவி விலகிய இருவரின் சொத்து விவரங்கள், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தவேண்டும் என, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பாஜக தொண்டர் ரஜ்னிஷ் சிங் தெரிவித்துள்ளார்.