

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது தூதராக இருக்கும் பிரணய் வர்மாவுக்கு பதிலாக 75 வயதான திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரணய் வர்மா பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திரிவேதி விரைவில் இந்தப் பொறுப்பை ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகளே தூதர்களாக நியமிக்கப்படும் நிலையில், அரிதாக அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரை, இந்தியா தூதராக நியமித்துள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீரமைக்கவும், அரசியல் ரீதியான பிணைப்பை வலுப்படுத்தவும் இவரது நீண்டகால அரசியல் அனுபவம் உதவும் என மத்திய அரசு கருதுகிறது.
திரிவேதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராகவும் (2011-2012), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும் (2009-2011) பணியாற்றியுள்ளார்.
2009 முதல் 2019 வரை அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் சார்பில், பராக்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2021-ல் பாஜகவில் இணைந்தார்.