

இந்தியாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் உச்ச நீதிமன்றம் வரை எட்டியுள்ளதை அனைவரும் அறிவோம். அதும் சமீபத்திய நாட்களில் தெருநாய்களால் அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தெருநாய்கள் மட்டுமல்ல, வீட்டில் சிலர் வளர்க்கும் நாய்களும் இதில் உட்படும். 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 37 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக அரசுத்தரவுகள் தெரிவிக்கிறது.
தெருநாய்களால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்வியும் எழுந்துவருகிறது. இருப்பினும் ஒரு தரப்பினர் அதனை ஆதரிக்க காரணம், தெருநாய்கள் அந்தந்த தெருவிற்கு பாதுகாவலர்களாகவே உள்ளன. பெரும்பாலும் அந்நியர்கள் நடமாட்டத்தின்போது அவை அதிக ஆக்ரோஷம் கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒடிசாவின் மயூர்பஞ்சியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் தெருநாய்கள் எப்போதும் அச்சுறுத்தலாக மட்டுமே இருப்பதில்லை என்பதை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது . ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தீரகுலா கிராமத்தில், காளி என்ற தெருநாய், 30க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளி குழந்தைகளை விஷப்பாம்பிடமிருந்து காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்துள்ளது.
உள்ளூரில் உள்ள பள்ளியின் வளாகத்தில் அமர்ந்து குழந்தைகள் விளையாடியுள்ளனர். அப்போது விஷப்பாம்பு ஒன்று அங்கு நுழைந்துள்ளது. உடனே அங்கிருந்த காளி அதை அறிந்து குழந்தைகளை காக்க அப்பாம்புடன் சண்டைபோட்டுள்ளது. குழந்தைகளை பாம்பு நெருங்காமல் தடுக்க காளி அதனுடன் கடுமையாகப் போராடியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் வாய் மற்றும் முகத்தில் பல்வேறு முறை பாம்பிடம் இருந்து கடி வாங்கியுள்ளது. பாம்பு கொத்தினாலும், அதை கொல்லும் வரை காளியும் சண்டையிட்டுக் கொண்டே இருந்துள்ளது. பாம்பு இறந்த கொஞ்ச நேரத்திலேயே காளியும் இறந்தது. தான் இறந்தாலும், 30 குழந்தைகளை காப்பாற்றிய காளிக்கு அக்கிராமமே இணைந்து இறுதி சடங்கு நடத்தியுள்ளது. இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.