

நாட்டின் பெரும் பகுதிகளை ஒரு பரவலான மற்றும் கடுமையான வெப்ப அலை சூழ்ந்துள்ளதுடன், வரும் நாட்களில் டெல்லி மற்றும் வட இந்தியா கடுமையான அசௌகரியத்தை எதிர்கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமவெளிப் பகுதிகளில் (டெல்லி உட்பட), பொதுவாக அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் எனவும் தற்போது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
தீவிரமடைந்து வரும் கோடையின் முழு தாக்கத்தையும் லட்சக்கணக்கான இந்தியர்கள் உணரப் போகிறார்கள் என IMD அறிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான காலகட்டங்கள் என எச்சரித்துள்ளது.
வடக்கில் கடும் வெப்பம் நிலவும் அதே வேளையில், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை, மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.