அரியானா: லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுடன் தொடர்புடைய 2 குற்றவாளிகள் என்கவுண்டரில் கொலை

பல வழக்குகளில் தேடப்பட்ட இவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர்
குற்றவாளிகள்
குற்றவாளிகள்
Published on

சர்வதேச அளவில் இயங்கி வரும் குற்ற கும்பலாக லாரன்ஸ் பிஸ்னாய் கும்பலை சேர்ந்த இருவரை டெல்லி மற்றும் அரியானா காவல்துறை இணைந்து என்கவுண்டர் செய்துள்ளது.

குற்ற கும்பல்

அரியானா மாநிலம் பகதூர்கரில் நடந்த இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் ஹிசாரைச் சேர்ந்த பிரவேஷ் மற்றும் ஜகோட் கேரா கிராமத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு ஆகியோர் ஆவர்.

இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஹரிராம் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும், பல வழக்குகளில் தேடப்பட்ட இவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலைப் பின்னணி

கடந்த ஜூன் 11 அன்று ஹான்சியில் பட்டப்பகலில் கபில் என்ற உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் முக்கியக் குற்றவாளிகள் ஆவர்.

இந்தக் கொலையின் சிசிடிவி காட்சிகளும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனடியே குற்றவாளிகள் மற்றொரு குற்றத்தை அரங்கேற்ற ஆயுதங்களுடன் பகதூர்கர் பகுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த தாகிவளின் பேரில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் மற்றும் அரியானா அதிரடிப்படை போலீஸ் குழு இணைந்து அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

ஷூட் அவுட்

அங்கு அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் இருவருக்கும் குண்டடி பட்டது. மேலும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காலில் குண்டு பட்டு காயமுற்றார்.

காயமடைந்த மூவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் இரண்டு குற்றவாளிகளும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

கான்ஸ்டபிள் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது நிலை உயிருக்கு ஆபத்தானதல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மோதல் தொடர்பாக பகதூர்கர் சதர் காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com