டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு - 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

10 பேரும் அல்கொய்தாவின் கிளை அமைப்பான 'அன்சார் கஸ்வத் உல் ஹிந்த' என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என கூறப்பட்டு உள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு - 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

டெல்லி செங்கோட்டை எதிரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 15 பேர் பலியானார்கள். ஏராளமா னோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை டெல்லி போலீசிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்தது. சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் மீது உபா சட்டம். ஆயுதத்தடுப்பு சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் உமர் முகமது என்பவர் தற்கொலை குண்டாக இருந்து உயிரை மாய்த்தார். இந்த குற்றச் சம்பவத்தில் இவர் உள்பட பலர் டாக்டர்கள். இவர்கள் அரியானா மாநிலத்தின் அல்பலா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னணியிலும் மேலும் சிலர் கைது ஆனார்கள்.

இந்த நிலையில் வழக்குக்கு தேவையான பல ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை புலனாய்வு முகமையினர் சேகரித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை டெல்லியில் உள்ள புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை 7,500 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அதில் டாக்டர் உமர் முகமது, அமீர் ரஷீத் அலி, ஜாசிர் பிலால்வானி, முசம்மில், அதீல் அகமது ராதர், முப்தி இர்பான் அகமது, ஷாகீன் சமீத், சோயப், பிலால் நசீர் மல்லா, யாசிர் அகமது தார் ஆகிய 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளன. 10 பேரும் அல்கொய்தாவின் கிளை அமைப்பான 'அன்சார் கஸ்வத் உல் ஹிந்த' என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என கூறப்பட்டு உள்ளது.

"ஆபரேஷன் ஹெவன்லி ஹிந்த்" என்ற பெயரில் நாட்டின் பல இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையுடன் 588 சாட்சிகளின் வாக்குமூலங்கள். 395 ஆவணப்பதிவுகள் மற்றும் குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 11 பேரை கைது செய்திருந்ததாக தெரிவித்த புலனாய்வு முகமையினர், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com