பச்சிளம் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற தம்பதி

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
பச்சிளம் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற தம்பதி
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் பரித்கோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பிறந்து 3 நாட்களே ஆன தங்களது ஆண் குழந்தையை ஒரு கும்பலிடம் ரூ. 2.25 லட்சத்திற்கு விற்றனர்.

இந்த கும்பலை சேர்ந்த 3 பேர் அரியானாவின் பகதூர்கர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் டெல்லியில் உள்ள குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ரூ.9.25 லட்சத்திற்கு இந்த குழந்தையை விற்கத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தை ஜஜ்ஜாரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையின் உண்மையான பெற்றோரிடம் விசாரித்தபோது நாங்கள் வறுமையில் வாடுவதால் தங்கள் மகனுக்குச் சிறந்த வளர்ப்பு கிடைக்கும் என்று நம்பி குழந்தையை விற்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com