அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பதுக்கிய தம்பதி கைது

ஸ்கூட்டருக்குள் 1 கிலோ உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
Couple Arrested
Published on

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று பெரும்பாவூர் அருகே பள்ளிப்புரம் சந்திப்பு பகுதியில் குன்னு வழி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஸ்கூட்டருக்குள் 1 கிலோ உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர் வைப்பின் பகுதியை சேர்ந்த ஆயுஷ் (வயது 39) என்பதும், அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து ஆயுஷ் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையில் 15 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 16 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் ஆனது. இதன் சந்தை மதிப்பு ரூ.18 கோடி இருக்கும் என தெரிகிறது.

விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுஷின் மனைவி அனிலா (34) உயர்ரக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும், உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்து தம்பதி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தம்பதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் பெரும்பாவூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com