மத்திய அரசுடன் ஆலோசனை: வாட்ஸ்அப் பயனர் பெயர் அம்சத்தை நிறுத்தி வைத்தது மெட்டா!

மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்க வழங்கிய காலக்கெடுவை ஜூலை 9 வரை நீட்டித்துள்ளது.
மத்திய அரசுடன் ஆலோசனை: வாட்ஸ்அப் பயனர் பெயர் அம்சத்தை நிறுத்தி வைத்தது மெட்டா!
Published on

வாட்ஸ்அப்பின் ‘பயனர் பெயர்’ அம்சம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை முடியும்வரை, அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாட்டோம் என மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய அம்சம் தொடர்பாக மத்திய அரசு மெட்டாவிடம் விளக்கம் கோரி வழங்கிய காலக்கெடுவை மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஜூலை.9 வரை மெட்டாவிற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்பின் பயனர் பெயர் (username feature) அம்சம் என்றால் என்ன?

இன்ஸ்டாகிராம் ஆப் வைத்திருப்பவர்களுக்கு இந்த அம்சம் எளிதில் புரியும். அதாவது இன்ஸ்டாகிராமில் நமது தொலைபேசி எண் இல்லாமல், நாம் விரும்பும் பெயரை கொடுத்து நமக்கான ஒரு கணக்கை அதில் தொடங்க முடியும்.

ஆனால் வாட்ஸ்அப்பில் ஒரு கணக்கு தொடங்க தொலைபேசி எண் கட்டாயம். இதனைத்தான் தற்போது இன்ஸ்டாகிராம் மாதிரியில், வெறும் பயனர் பெயரை வைத்து கணக்கு தொடங்கும் வகையில் மெட்டா நிறுவனம் மாற்றியமைக்கிறது. இதன்மூலம் நாம் விரும்பும் பெயரில் ஒரு கணக்கை வாட்ஸ் அப்பில் தொடங்கலாம்.

மத்திய அரசின் ஆலோசனை ஏன்?

மொபைல் எண் மறைக்கப்படுவதால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு கடினமாகும். ஒரே பெயரில் பல கணக்குகளை தொடங்கி மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கும். இதனை கருத்தில்கொண்டே மத்திய அரசு இந்த அம்சம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com