தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கல் - பாராளுமன்ற சிறப்புப் கூட்டம் கூடுகிறது!

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கல் - பாராளுமன்ற சிறப்புப் கூட்டம் கூடுகிறது!
Published on

2029 மக்களவைத் தேர்தல் முதல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான 106-வது அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து, பாராளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது.

மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி தொகுதி மறுவரையரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்பு சட்டப்பிரிவு 81-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான தொகுதிகள் சுழற்றி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டத்திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு வழிவகுக்கும் வரைவு மசோதா தாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. வரைவு மசோதா மக்களவை உறுப்பினர்களின் பார்வைக்கு நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார். 3 நாட்களுக்கு 18-ம் தேதி வரை அதன் மீது விவாதம் நடைபெறும்.

தற்போது தொடங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக முடிவடைய தாமதம் ஆகும் என்பதால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

நேற்று இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டாலும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும் என தென் மாநில அரசுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com