கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிரான மனு.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன விஷயம்

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளும் பாஜகவை விட அதிக பாலோயர்ஸ்களைப் பெற்று சாதனை படைத்தது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிரான மனு.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன விஷயம்
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்கு விசாரணை ஒன்றில், "வேலையற்ற சில இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள் மீது கரப்பான் பூச்சிகளைப் போல தாக்குதல் நடத்துகிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதியின் இந்த 'கரப்பான் பூச்சி' என்ற ஒப்பீடு, சமூக ஊடகங்களில் தங்களைப் போன்ற வேலையற்ற இளைஞர்களை அவமதிக்கும் செயல் என பலர் கருதினர்.

சமூக ஆர்வலர் அபிஜித் திப்கே என்பவர் ஒரு நையாண்டியாக'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

தங்களை "சோம்பேறிகள் மற்றும் வேலையற்றோரின் குரல்" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த இயக்கம், நீட் வினாத்தாள் கசிவு, வேலையின்மையால் விரக்தி அடைந்த லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது.

அரசியல் நையாண்டி மீம்கள் மூலம், இந்தத் பக்கம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளும் பாஜகவை விட அதிக பாலோயர்ஸ்களைப் பெற்று சாதனை படைத்தது.

சர்ச்சை முற்றவே, தலைமை நீதிபதி சூரியகாந்த், தான் ஒட்டுமொத்த இளைஞர்களைக் குறிப்பிடவில்லை என்றும், போலி பட்டதாரிகளை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாகவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுபுறம், இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி' தனது அதிகாரப்பூர்வ 5 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவிகள் வழங்கப்படக் கூடாது. விரிவான தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். கட்சி மாறும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நீண்ட காலத் தடை விதிக்கப்பட வேண்டும். அரசியலில் பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என சிஜேபி வலியுறுத்தியது. சிஜேபியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டு அதன் இணையதளமும் தடை செய்யபட்டது. அதன் நிறுவனர் அப்ஜித்க்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதற்கிடையே இது வெளிநாட்டு சதி என பாஜக விமர்சித்தது. இந்த சூழலில் சிஜேபியை குறித்து சிபிஐ விசாரணை கோரி அதற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது.

தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதி ஜாய்மால்ய பாக்சி மற்றும் நீதிபதி வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, இந்த மனுக்களை இன்று நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடுவதற்கோ அல்லது அவசரமாக விசாரிப்பதற்கோ எந்தவொரு அசாதாரணமான சூழலும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த மனுக்களில் உள்ள சட்ட அம்சங்கள் உரிய நேரத்தில், முறையான நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி, "இந்த ஆன்லைன் இயக்கம் ஒட்டுமொத்த உலகிற்கு முன்னால் இந்திய நீதித்துறையின் மதிப்பைத் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருகிறது. எனவே, இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தின் பின்னணி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

வழக்கறிஞரின் காரசாரமான வாதத்தைக் குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூரியகாந்த் "இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு அணுகக் கூடாது" என்று அறிவுரை வழங்கினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com