

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு குடும்பம் கார் டிக்கியில் சிறுவர்களை அமர வைத்துக்கொண்டு அதிவேகமாக காரில் செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நெடுஞ்சாலையில் அந்த கார் மணிக்கு 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்கிறது. கார் அதிவேகமாக செல்லும்போது திறந்திருக்கும் டிக்கி பகுதிக்குள் 3 சிறுவர்கள் அமர்ந்திருப்பதை காண முடிகிறது.
இந்த காணொளியை கண்ட பயனர்கள், ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக சைபராபாத் போக்குவரத்து போலீசார் கூறுகையில், இந்த பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அது சரிபார்க்கப்படும்.
ஓடும் வாகனத்தின் டிக்கி பகுதியில் பயணிகளை, குறிப்பாக குழந்தைகளை ஏற்றிச் செல்வது மிகவும் ஆபத்தானது, உயிருக்கு கடுமையான அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து வாகன ஓட்டிகளும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பொறுப்புடன் பயணம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.