

ரிலையன்ஸ் ஏடிஏ குழுமம் தொடர்பான வழக்குகளில் ஒன்றில், சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், நிறுவனத்தின் ஐந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, முன்னாள் சிண்டிகேட் வங்கி ஆகியவற்றைச் சேர்ந்த 10 வங்கி அதிகாரிகள் உட்பட 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
RC0742025E0005 தொடர்பான குற்றப்பத்திரிக்கை, 2026 மே 29 அன்று, மும்பையில் உள்ள சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்ற சதி, மோசடி, குற்றவியல் முறைகேடு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு தொடர்பான பிரிவுகளின் கீழ் ஏற்கனவே குறிப்பிட்ட 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.-இன் கூற்றுப்படி, இந்தக் குற்றப்பத்திரிக்கை எஸ்.பி.ஐ. வழங்கிய ரூ.1,200 கோடி கால கடன், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வழங்கிய ரூ.500 கோடி கடன் கடித வசதிகள் மற்றும் முன்னாள் சிண்டிகேட் வங்கி வழங்கிய ரூ.350 கோடி கடன் கடித வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கி வசதிகளை திசைதிருப்பி, தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுவது தொடர்பானது ஆகும்.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூட்டமைப்பு வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கூடுதல் கடன்கள் மற்றும் பொது நிதியை திசைதிருப்பி முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் செயலில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சதிகாரர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிக்கு ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மற்றும் அனில் அம்பானிக்கு எதிராக எஸ்.பி.ஐ. அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. முன்னதாக RC0742025E0005 என்ற வழக்கை பதிவு செய்திருந்தது.
முதல் தகவல் அறிக்கையின்படி, எஸ்.பி.ஐ. தலைமையிலான 11 வங்கிகளின் கூட்டமைப்பு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூபாய் கால கடன்களை அனுமதித்திருந்தது. அதே சமயம், 17 பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ரூ. 19,694.33 கோடியாக இருந்தது.