

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டது.
காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சனை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அப்போது முதல் இப்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சனைகளைத் தீர்த்து வருகின்றன. அந்த வகையில் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் இன்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் பங்கேற்றார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது.
காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று 2.5 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.