search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்துடன் அங்கேயே தங்கிவிட்டதால் ஊரில் காலியாக கிடக்கும் பங்களாக்கள்

    • கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த கைப்புழா கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம்.
    • வெளிநாடுகளில் தங்கி இருப்போரில் சிலரது வயது முதிர்ந்த பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    வெளிநாட்டு வேலைக்கு செல்வது முன்பெல்லாம் கனவாக இருந்தது.

    தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி காரணமாக இப்போது வெளிநாட்டு வேலைக்கு செல்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்தியாவில் இருந்து இப்படி வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் அங்கே பணம் சம்பாதித்து அதனை ஊரில் உள்ள உறவுகளுக்கு அனுப்புவார்கள்.

    அவர்கள் சொந்த ஊரில் நிலம் வாங்கி வீடு கட்டி அதனை பராமரித்து வருவார்கள். ஓரளவுக்கு பணம் சேர்த்ததும், வெளிநாட்டில் இருப்போர் சொந்த ஊருக்கு வந்து இங்கேயே செட்டிலாகி விடுவது வழக்கம்.

    இந்தியாவிலேயே கேரளாவில் இருந்துதான் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு குடும்பத்தில் இருந்து வெளிநாடு செல்லும் ஒருவர் அங்கு தனக்கான வேலையை உறுதி செய்த பின்பு, தனது சொந்த பந்தங்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று அவர்களுக்கும் அங்கேயே வேலை வாங்கி கொடுத்து விடுவார்.

    இந்த வகையில் கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த கைப்புழா கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம். இதற்கு காரணம் இந்த ஊரில் கனாயா கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களில் கடந்த 1950-ம் ஆண்டுகளில் பலர் வேலை தேடி வெளிநாடு சென்றனர், அவர்கள் அங்கு வேலையில் சேர்ந்த பின்னர் தங்களின் உறவுகளை வேலை பார்க்கும் நாடுகளுக்கு அழைத்து கொண்டனர்.

    பின்னர் தங்கள் உறவுகளை மட்டுமின்றி தங்கள் மதத்தை சேர்ந்தோரையும் தாங்கள் வேலைபார்க்கும் நாடுகளுக்கு அழைத்து அங்கேயே அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.

    இதனால் வெளிநாடுகளுக்கு செல்வோர், முதலில் அவரும், தொடர்ந்து மனைவி, மாமன், மச்சான் என குடும்பமே அந்த நாட்டிற்கு சென்று தங்கி விடுவார்கள். இதில் ஓரளவுக்கு திடகாத்திரமாக இருக்கும் பெற்றோரையும் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்.

    இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் தங்கிவிடுவதால், சொந்த ஊரில் அவர்கள் பார்த்து, பார்த்து கட்டிய 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் வசிக்க ஆளில்லாமல் பூட்டியே கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு களுக்கு செல்ல இயலாத முதியோர் மட்டுமே ஓரிரு வீடுகளில் அனாதையாக தங்கி இருக்கிறார்கள்.

    கோட்டயம் பகுதியில் உள்ள கைப்புழா கிராமத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுப்பில் 11 சதவீதம் வீடுகள் பூட்டிக்கிடப்பது தெரியவந்தது.

    இதுவே கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 10.6 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று இங்கு ஆய்வு நடத்தியோர் தெரிவிக்கிறார்கள்.

    இதுபற்றி இப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்தும் பிஜூ ஆபிரகாம் என்பவர் கூறும்போது, இங்குள்ள ஒருசில வீடுகளில் மட்டுமே ஆட்கள் தங்கி உள்ளனர். பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கிறது. அதனை பராமரிக்கவும் ஆள் இல்லை.

    வெளிநாடுகளில் தங்கி இருப்போரில் சிலரது வயது முதிர்ந்த பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்கி உள்ளனர். சிலரது பெற்றோர் சொந்த வீட்டில் தான் இருப்பேன் என அடம்பிடித்து தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான பணத்தை வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் அனுப்பி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தான் உணவு வழங்குகிறோம். அவர்களின் வாழ்க்கை முடிந்துபோனால் அந்த வீடுகளும் காலியாகி விடும்.

    இப்போது வெளிநாடுகளுக்கு சென்ற பலரும் சொந்த ஊருக்கு வர விரும்புவதே இல்லை. இதுபோன்ற நிலைதான் கோட்டயம் கைப்புழா கிராமத்தை போல உழவூர், கரிங்குன்னம், கடும்துருத்தி போன்ற கிராமங்களிலும் நிலவுகிறது.

    இந்த கிராமங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் அரண்மனை போல கட்டப்பட்டிருக்கும். பல கிரவுண்டு நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த பங்களாக்களின் விலை பல கோடியை எட்டும். இதனால் சாதாரண நபரால் இந்த வீடுகளை வாங்க முடியாது. பல கோடி கொடுத்து வாங்கும் திறன் உள்ளவர்கள், இந்த ஊரில் எதற்காக இவ்வளவு பணத்தை முடக்க வேண்டும் எனக்கருதி இந்த வீடுகளை வாங்க முன்வருவதில்லை. இதனால்தான் பல வீடுகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்தாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கிராமங்கள் எப்போதும் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    Next Story
    ×